இரவு பத்து மணியளவில் அக்கரைப்பற்று வைத்தியசாலையின் மருத்துவ விடுதியில் புதிதாக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களை பார்வையிட்டு கொண்டிருந்தேன். VOG யின் மொபைலில் இருந்து அழைப்பொன்று வந்தது. ஒரு ப்ரெக்னன்ட் மதர் மூச்சுத்திணறலோட வந்திருக்கா… எங்கட சைட் பிரச்சினை போல தெரியல, கொஞ்சம் வந்து பார்க்க முடியுமா? “ என்று கேட்டார். உடனே அவசர சிகிச்சை பிரிவிற்கு சென்றபோது 33 வயதான ஒரு பெண் மூச்சுத்திணறலோடு மிகவும் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தார். அவசர சிகிச்சை வைத்தியர் ஒக்சிஜன் வழங்கியிருந்த போதும் அத்தாய் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். மொனிட்டரில் அவரது இதயத்துடிப்பு 148 ஆக இருந்தது.
ஏதோ மிகவும் சீரியசான பிரச்சினை ஒன்று போய்க்கொண்டிருப்பதை உணர்ந்து கொண்டேன். இதயத்துடிப்பு நீண்ட நேரத்திற்கு அதிகரித்துக் காணப்பட்டால் அது இதயத்தை பலவீனப்படுத்திவிடும். ஒரு கட்டத்தில் இதயம் செயலிழந்து இறப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக எமது இதயத்துடிப்பு நிமிடத்துக்கு 70-80 ஆக இருக்கும், 100 ஐ விட அதிகரித்த இதயத்துடிப்பு பொதுவாக நோய் அறிகுறியாகும். 150 ஐ நெருங்கிய இதயத்துடிப்பு பொதுவாக ஆபத்தானது. இதயத்தில் அல்லது சுவாசத் தொகுதியில் சிக்கலான நோய்கள் ஏற்படும்போது இதயத்துடிப்பு மிகவும் அதிகரித்துக் காணப்படும். அதிலும் குறிப்பாக கர்பிணித்தாய்மாரில் ஏற்படும் அதிகரித்த இதயத்துடிப்பு மிகவும் ஆபத்தானதாக இருக்கலாம். வழமையாக கர்ப்பிணிப் பெண்கள் ஏதாவது நோயோடு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது அதீத கவனம் செலுத்தப்படும்.
ஏனெனில் இலங்கையில் தாய்மார் இறப்பு வீதம் வருடத்திற்கு 29/100000 ஆக காணப்படுகிறது. அதாவது ஒருவருடத்தில் ஒரு இலட்சம் குழந்தைகள் பிறக்கும்போது 29 தாய்மார் இறந்து போகின்றனர். இது ஏனைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த அளவாகும். (ஆப்கானிஸ்தான்-638, பாகிஸ்தான் – 276, இந்தியா – 174, பங்களாதேஷ்- 173). இந்த இறப்புக்களை மேலும் குறைப்பதற்கு எமது சுகாதார அமைச்சு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. எனவேதான் இத்தாயும் மிகவும் சிரத்தையோடு கவனிக்கப்பட்டார். கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான நோய் நிலைமைகள் என் கண்முன்னே ஓடிக்கொண்டிருந்தன.
சுவாச நோய்கள் ஏற்படும்போது மூச்சுத்திணறலும் அதிகரித்த இதயத்துடிப்பும் ஏற்படும். ஆனால் இப்பெண்ணின் சுவாசப்பைகளை சோதித்தபோது அவை தெளிவாக இருந்தன. 2 நாட்களாக இலேசான காய்ச்சல் இருந்ததை தவிர வேறு எந்த பிரச்சினைகளும் இருந்திருக்கவில்லை. மிக முக்கியமாக பல்மனரி எம்பொலிசம் ( pulmonary embolism ) எனும் மிக மிக ஆபத்தான நோய்நிலை கர்ப்பிணிகளுக்கு ஏற்படலாம். இரத்தம் உறைவடைந்து சுவாசப் பையின் இரத்தக் குழாய்களில் அடைத்துக் கொள்வதால் இது ஏற்படுகிறது. சில வேளைகளில் கர்ப்பப் பையினுள் உள்ள திரவம் இரத்தக் குழாயினுள் கசிந்து சுவாச இரத்தக் குழாய்களில் அடைப்பதனாலும் இது ஏற்படலாம். இது உயிராபத்தான நிலையாகும். முறையாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் தாயும் குழந்தையும் இறப்பதற்கான வாய்ப்புள்ளது. எனவே அதற்கான பரிசோதனைகளையும் உடனடியாக மேற்கொண்டோம். ECG எடுக்கப்பட்டது. நேரம் நடுநிசியை தொட்டுக்கொண்டிருந்தபோது எக்கோ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இரத்த மாதிரிகள் வைத்தியசாலையிலும் தனியார் ஆய்வுகூடங்களுக்கும் அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவுகள் பல்மனரி எம்பொலிசத்திற்கு சாதகமாக இருக்கவில்லை. இது ஓரளவுக்கு ஆறுதலாக இருந்த போதும் 140ஐ தாண்டிய அத்தாயின் இதயத்துடிப்பு அச்சுறுத்திக் கொண்டே இருந்தது. ஏனைய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்து மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது Viral myocarditis – வைரல் மயோகார்டைடிஸ் எனும் இதயத்தசை அழர்ச்சியாகும். (அலர்ஜி அல்ல).
Viral myocarditis – வைரல் மயோகார்டைடிஸ் என்பது மிக அரிதாக ஏற்படக்கூடிய ஒரு நோயாகும். Europian society of Cardiology யின் அறிக்கையின் படி இந்நோயை கண்டறிவது மிகவும் சிரமமானது. பொதுவாக இந்நோயை கண்டறிவதற்கு இதயத்தின் தசையின் நுண்ணிய பகுதி இழையவியல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் (heart muscle biopsy). இது உயிரோடிருக்கும் ஒருவரில் செய்யப்படுவது மிக மிக சிரமமானது. அத்தோடு இந்நோயை கண்டறிவதில் நவீன மருத்துவ உலகில் பல்வேறு பரிசோதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. Cardiac MRI எனப்படும் இதயத்தை MRI ஸ்கேன் செய்வதன் மூலம் இதயத்தின் தொழிற்பாட்டை மிகத் துல்லியமாக கணிப்பிடலாம்.
இதயத்தசைகள் வெளியிடும் இரசாயன பதார்த்தங்களை (Cardiac biomarkers) இரத்தத்தில் பரிசோதிப்பதன் மூலமும் இந்நோயை கண்டறியலாம். ஆனால் இவற்றை அக்கரைப்பற்று வைத்தியசாலைபோன்ற ஒரு சாதாரண ஆதார வைத்தியசாலை ஒன்றில் நாம் எதிர்பார்க்க முடியாது. எனவே இந்நோயை கண்டறிவதற்கு சிறந்த அனுபவமும் மருத்துவ ஆளுமையும் அவசியமாகிறது.
இதனால் வைரல் மயோகார்டைடிஸ் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது மிகவும் சவாலானதாகவே உள்ளது. வருடாந்தம் ஒரு இலட்சம் சனத்தொகையில் 22 பேருக்கு இந்நோய் ஏற்படுகிறது. இதில் 6 பேர் மரணிக்கின்றனர். ஆனால் கர்ப்பகாலத்தில் இந்நோய் ஏற்படும் போது இறப்பு வீதம் மேலும் அதிகரிக்கின்றது. இவ்வாறான பல்வேறு தடைகளையும் தாண்டி ஒரு கர்ப்பிணித்தாயை சிகிச்சை அளிப்பது மிகப்பெரும் சவாலாகும்.
மயோ கார்டைடிஸ் பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றபோதிலும் வைரஸ் தொற்றுக்களே பிரதான காரணமாக உள்ளது. கொக்ஸகி B, இன்பிளுவென்ஸா, பர்வோ B (Coxsackie B, influenza, Parvo B) போன்ற வைரஸ்கள் இதயத்தை அதிகம் தாக்குகின்றன. இந்தப் பெண்ணும் இருதினங்களாக தடிமன் காய்ச்சல் ஏற்பட்டிருந்ததனால் இவருக்கு வைரல் மயோகார்டைடிஸ் ஏற்பட்டிருக்கலாம் என சிகிச்சைகளை ஆரம்பித்தேன். மிகக் கவனமாக அவரது நாடித்துடிப்பு, சுவாச வீதம், ஒக்சிஜன் அளவு என்பன கண்காணிக்கப்பட்டன.
தொண்டையிலிருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக கொழும்பு மருத்து ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வைரஸ் கொல்லி மருந்தும் வழங்கப்பட்டது. அப்பெண்ணின் உறவினர்கள் மட்டுமல்லாது வைத்தியசாலை ஊழியர்களும் பதற்றமாகவே அன்று இரவைக் கழித்தனர். அதிகாலை நான்கு மணியளவில் அப்பெண்ணின் இதயத்துடிப்பு மெதுவாக குறைவடைய ஆரம்பித்தது. காலையில் அவரது மூச்சுத் திணறல் குறைவடைந்து இதயத்துடிப்பு வீதம் 120 ஐ தொட்டிருந்தது. காலை உணவை சிரமமின்றி அவரால் சாப்பிட முடிந்தது. படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட 2ம் நாள் அவர் தானாக நடந்து இயங்க ஆரம்பித்தார். ஐந்து நாட்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டது. கருவில் இருந்த குழந்தையின் ஆரோக்கியமும் வைத்தியர்களால் இடைக்கிடையே சோதிக்கப்பட்டது.
ஆறாம் நாள் இதயத்துடிப்பு சாதாரண நிலைக்கு வந்த போது அத்தாயும் வழமை போன்று “எப்ப சேர் டிக்கட் வெட்டுவீங்க? “ என்ற கேள்வியை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். “அம்மா இப்ப ஒங்களுக்கு எல்லாம் நல்லம். இதயம் இப்ப நோர்மலா வேல செய்யுது. இண்டக்கி மட்டும் ஒப்சேவ் பண்ணிட்டு நாளைக்கி டிக்கட் வெட்டுவம் “ என்று சொன்னபோது அத்தாயின் மனதில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடித்துப் பறந்தன.- Vidivelli
Dr. MSM. Nusair
MBBS, MD (col)
Consultant physician (acting)
Base hospital- Akkaraipattu
0 Comments