கொழும்பு லேடி ரிஜ்வே மருத்துவமனையில் ஹம்தி என்ற மூன்று வயது சிறுவனுக்கு சிறுநீரகம் ஒன்றை அகற்றுவதற்கு நடாத்தப்பட்ட சத்திர சிகிச்சையின் போது, சத்திர சிகிச்சை செய்த மருத்தவர்கள், குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களையும் அகற்றியுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இந்த மூன்று வயது குழந்தையின் ஒரு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பாதிக்கப்பட்ட சிறுநீரகத்தை உடனடியாக சத்திர சிகிச்சையின் மூலம் அகற்ற வேண்டும் என மருத்துவர்கள் தீர்மானித்தனர்.
இந்த சத்திரசிகிச்சைக்கு குழந்தையின் பெற்றோர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து கடந்த 24.12. 2022 அன்று குழந்தைக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சத்திரசிகிச்சையை மருத்துவர் நவீன் விஜயகோன் என்பவர் நடாத்தியுள்ளார்.
சத்திரசிகிச்சையின் பின்னர் குழந்தையின் நிலைமைமோசமடைந்ததன் காரணமாக நடாத்தப்பட்ட பரிசோதனைகளின் போது, குழந்தையின் பாதிக்கப்பட்டிருந்த சிறுநீரகத்தோடு சேர்த்து நல்ல நிலையில் இயங்கி வந்த சிறுநீரகத்தையும் மருத்துவர்கள் அகற்றியிருப்பது தெரிய வந்தது.
குழந்தையின் உடலிருந்து அகற்றப்பட்ட நல்ல நிலையில் இயங்கி வந்த, குறித்த சிறுநீரகத்திற்கு என்ன நடந்தது என்ற தகவலை வெளியிட லேடிரிஜ்வே மருத்துவமனை நிர்வாகம் இதுவரை முன்வாராதது பெருத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மேற்படி சத்திரசிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த மோசடியை மூடிமறைக்கவே லேடி ரிஜ்வே மருத்துவமனை நிர்வாகம் இன்று வரை முயற்சி செய்து வந்திருக்கிறது. குழந்தைக்கு எப்படியாவது சிறுநீரகம் ஒன்றைப் பொருத்தி குழந்தையின் உயிரை பாதுகாப்பதாக மருத்துவர்கள் குழந்தையின் பெற்றோருக்கு உறுதியளித்திருந்த போதிலும், மருத்துவர்களின் வாக்குறுதிகள் பொய்ப்பித்து போன நிலையில் ஹம்தி என்ற குழந்தையும் அவர்களின் பெற்றோரும் எவ்வித தீர்வுகளும், உதவிகளும் இன்றி நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு ஐயாயிரம் ரூபாய் அளவில் குழந்தைக்கு மருத்துவ செலவுகளை செய்ய வேண்டிய இக்கட்டான நிலைக்கு குழந்தையின் பெற்றோர் தள்ளப்பட்டு தவித்து வருகின்றனர்
குழந்தை ஹம்தி தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டிருக்கிறான்.
ஹம்தி என்ற குழந்தையின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
Thanks to Jafna Muslim.
0 Comments