வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தில் உள்ள பெரிய மரமொன்றில் 100 அடிக்கும் அதிகமான உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த பரணில் இருந்து மிகவும் சூட்சுமமாக நடத்தப்பட்டு வந்த போதைப்பொருள் வர்த்தகம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஹெரோயின் போதைப்பொருள், தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன் பெண் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெயாங்கொடை மாரபொல பிரதேசத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகளும் இதன்போது பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் தனது வீட்டுக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் பரண் ஒன்றை அமைத்து யாரும் அறியாத வகையில் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி சென்றுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
பணத்தை பையில் இட்டு கயிறு மூலம் பரணுக்கு அனுப்பிய பின்னர் பரணில் இருந்து போதைப்பொருளை கீழே அனுப்பி இந்த வர்த்தகம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்தது.
பரணில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளை பரவலாக அவதானிக்க முடிவதால் வௌியாட்கள் யாரும் அங்கு வந்தாலும் கண்காணிக்க கூடியவாரு பரண் அமைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 Comments