நாட்டில் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்டவை தொடர்பாக அனைத்து மதத்தினருக்கும் ஒரே விதமான பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை சமர்ப்பிக்க 22-வது சட்ட ஆணையம் அழைப்பு விடுத்தது. இதன்படி கடந்த ஜூன் 14-ம் தேதி முதல் ஒரு மாதத்துக்குள் கருத்துகளை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. பின்னர் கருத்துகளை சமர்ப்பிக்க மேலும் 2 வாரங்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டது. இந்த அவகாசம் கடந்த 28-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் நாடு முழுவதிலும் இருந்து 1 கோடி கருத்துகள் பெறப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சட்ட ஆணைய வட்டாரங்கள் கூறும்போது, “பொது சிவில் சட்டம் குறித்து கருத்துகளை தெரிவிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்படாது. அரசியல் கட்சிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தப்படும். பொது விவாதங்கள், கருத்தரங்குகள் நடத்தப்படும்" என்று தெரிவித்தன. இதுகுறித்து மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கூறும்போது, “பொது சிவில் சட்டம் தொடர்பாக சட்ட ஆணையத்திடம் ஒரு கோடிக்கும் மேற்பட்ட கருத்துகள் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன. இந்த கருத்துகள் குறித்து பரிசீலனை செய்யப்படும்" என்று தெரிவித்தார்.
0 Comments