ஆகக் கூடுதலான பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு எம்.பியொருவரை நீக்குவதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் அவ்வாறு எம்.பி ஒருவரை நீக்க முடியாது. அரசியலமைப்பில் அவ்வாறு எங்கும் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும, அந்த எம்.பி, வாரத்துக்கு இரண்டு தடவைகள் வெளிநாட்டுக்குச் சென்று, விசேட பிரமுகர் பயன்படுத்தும் வழியாக நாட்டுக்குள் நுழைவதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.
மே மாதம் இதுவரையான காலப்பகுதியில் மட்டும் ஐந்து தடவைகள் அவர் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன என்றார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அந்த எம்.பி (தங்கத்தை கடத்தி வந்த புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம்), தங்கத்தை கடத்திவந்து சிக்கிக்கொண்ட மறுநாளே, மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்.
பாராளுமன்றத்தில் வாக்களிப்பு நடைபெற்ற நாளன்று வந்த அவர், தன்னை யாரும் காப்பாற்றவில்லை. ஆகையால், அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்ததாக கதையைக் கூறுகின்றார். இது நல்ல நாடகம்.
இந்த நாடகத்துக்கான கதை, திரைகதை வசனம், நடிப்பு உள்ளிட்டவற்றுக்கு இம்முறை ஜனாதிபதி விருது வழங்கப்படவேண்டும். இல்லையேல் ரஹிம், சுமத்திபால ஆகிய விருதுகள் வழங்கப்படவேண்டும்.
இந்த கதை எவ்வளவு அவமானமானது. அரசாங்க ஊழியர் ஒருவர், இவ்வாறு தங்கத்தை கடத்திவந்து சிக்கிக்கொண்டு, 75 இலட்சம் ரூபாயை தண்டப்பணமாக செலுத்தினால், அவரை விட்டுவிடுவார்களால், அரச தொழிலையும் அவர் இழக்கவேண்டும்.
எனினும், தங்க எம்.பியால் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை பூஜ்ஜியத்துக்குச் சென்று மறை (-) க்குச் சென்றுள்ளது.
ஆகையால், அவர் அங்கம் வகிக்கும் கட்சி, அரசாங்கம் அவர் தொடர்பில் நடவடிக்கைகயை எடுக்கவேண்டும். ஆகக்குறைந்தது அந்த மாவட்ட (புத்தளம்) அபிவிருத்தி குழுவின் தலைவர் பதவியில் இருந்தாவது நீக்கவேண்டும் என்றார்.
0 Comments