தமிழ்த் திரைப்படங்களே சிறுவர்கள் மத்தியில் வன்முறைகளைத் தூண்டுவதாக பாராளுமன்றத்தில் வெகுஜன ஊடக அமைச்சின் ஆலோசனை செயற்குழுக் கூட்டத்தின்போது இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்த கருத்துக்கு நேருக்கு நேர் கடும் எதிர்ப்பை வெளியிட்ட மனோ கணேசன் எம்.பி., அந்தக் கூற்றை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்தக் கூட்டம் போக்குவரத்து, நெடுஞ் சாலைகள் மற்றும் வெகுசனஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (26) இடம்பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகள், செய்திப் பிரிவின் பிரதானிகள், அமைச்சின் அதிகாரிகள், பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஊடகங்கள் பின்பற்றும் நடைமுறைகள் மற்றும் அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அங்கு கருத்து வெளியிட்ட சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகே, தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் தமிழ்த் திரைப்படங்கள் வன்முறைகளைத் தூண்டுவதாக அமைவதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். குறிப்பாக கொலை செய்தல், வெட்டுக் குத்துக் காயங்கள், வெளிப்படையாக வழங்கப்படும் தண்டனைகள் ஆகியன சிறுவர்கள் மத்தியில் மாறுபட்ட சிந்தனைகளைத் தூண்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது குறுக்கிட்ட மனோ கணேசன் எம்.பி., டயனாவின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாகவும் திரைப்படங்கள் என்ற பொதுவான சொல்லாடல் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, தமிழ்த் திரைப்படங்கள் என இன ரீதியாக பார்க்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
இதனால் இருவருக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
வன்முறைக் காட்சிகள் அனைத்து மொழித் திரைப்படங்களிலும் இடம்பெறுகின்றன. தமிழ்த் திரைப்படங்களாலேயே மக்கள் உள ரீதியாக பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது என மனோ கணேசன் தெரிவித்தார். கூட்டத்துக்கு தலைமைதாங்கிய அமைச்சர் பந்துல குணவர்தன இருவரையும் சமாதானம் செய்வதற்கு முயற்சித்தார்.
அதன் பின்னர், அனைத்து மொழி திரைப்படங்களிலும் அவ்வாறான காட்சிகள் இடம்பெறுகின்றன என்று வைத்துக்கொள்வோம். தமிழ் மொழித் திரைப்படங்கள் மாத்திரமல்ல இந்த விடயத்தில் விரிவான கலந்துரையாடல் நடத்தப்பட்டு ஒழுங்குமுறையான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என டயனா கமகே தெரிவித்தார்.
0 Comments