கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை தயாரிக்கும் போது சுற்றுலா, மீன்பிடி, கைத்தொழில் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் அதிக கவனம் செலுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டம் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய அமைச்சர், அதன் இறுதி மதிப்பாய்வுப் பணிகளை ஜூன் மாதம் ஆரம்பிக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டம் தொடர்பில் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். குறித்த கலந்துரையாடல் நேற்று (29) நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் கிழக்கு பெருநகர அபிவிருத்தி திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார். அதன்படி, இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த கலந்துரையாடலை நடத்தினார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் ஆலோசனையின் பேரில் சிங்கப்பூரின் நகர வடிவமைப்பு நிறுவனம் கிழக்குப் பெருநகர வளர்ச்சித் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. இதன்போது முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களுக்கும் இத்திட்டம் தயாரிக்கப்படும். இதன் கீழ் இம்மாவட்டங்கள் பொருளாதார, வர்த்தக, கலாச்சார மற்றும் சுற்றாடல் ரீதியாக அபிவிருத்தி செய்யப்படும்.
இங்கு, நாடு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும், எனவே தற்போதைய பொருளாதார நிலைமைக்கு ஏற்ப இந்த அபிவிருத்தித் திட்டம் வடிவமைக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார். அதன் மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, பின்னர் நகர அபிவிருத்தி அதிகாரசபை இந்த அபிவிருத்தித் திட்டத்தை வர்த்தமானி மூலம் வெளியிடும்.
கிழக்குப் பெருநகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி மற்றும் நிலாவெளி பகுதிகள் கடல் மற்றும் சூழல் சுற்றுலா வலயங்களாகவும், மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் மற்றும் பாசிக்குடா பகுதிகள் மீன்பிடி மற்றும் சுற்றுலா வலயங்களாகவும், அம்பாறை மாவட்டத்தில் கோமாரி முதல் பானம வரையான பகுதிகள் கடலோர சுற்றுச்சூழல் சுற்றுலா வலயங்களாகவும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அத்துடன், கிண்ணியா மீன்பிடி கைத்தொழில் நகரமாகவும், புல்மோட்டை நகரம் கனிம கைத்தொழில் நகரமாகவும், மூதூர் நகரம் பசுமை சக்தி நகரமாகவும் அபிவிருத்தி செய்யப்படும்.
விடத்திற்குப் பொறுப்பான அமைச்சரினால் நகர அபிவிருத்தி அதிகாரசபையானது, நகர அபிவிருத்தி பிரதேசமாக அறிவிக்கப்படும் எந்தவொரு பிரதேசத்திற்கும் நகர அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தக் கடமைப்பட்டுள்ளது. இது 1978/41 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா, மேலதிகச் செயலாளர் (வீடமைப்பு) டபிள்யூ. எம். ஆனந்த, உதவிச் செயலாளர் (நகர அபிவிருத்தி) டபிள்யூ. பி. யு. காவிந்த்யா, நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத், பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (திட்டமிடல் வலயம் 2) லலித் விஜயரத்ன மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்
0 Comments